ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிவேகத்தில் சென்ற தனியார் பேருந்து திடீரென கடுமையாக பிரேக் அடித்ததால், பயணித்த ஒரு வயது குழந்தை சாலையில் பறந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் பேருந்தின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தை தற்போது சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளது என மருத்துவ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் முத்துராமலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார், தனது சகோதரி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி தனியார் பேருந்தில் பயணித்தார். பேருந்து மீனாட்சிபுரம் சிக்னல் அருகே வந்தபோது, ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், மதன்குமார் மற்றும் அவரது சகோதரியின் கைகளில் இருந்த 2.5 வயது மற்றும் ஒரு வயது குழந்தைகள் கட்டுப்பாட்டை இழந்து படிக்கட்டில் உருண்டு, பின்வரும் அதிர்வினால் சாலையில் பறந்து விழுந்தன.

இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்கள் பெரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். விபத்தில் குழந்தைகள் இருவரும் லேசான காயங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை முடிந்ததும் அவர்கள் வீடு திரும்பியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.