இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகார் தவான் தொடர்ந்த விவாகரத்து தொடர்பான சொத்து வழக்கில், அவரது முன்னாள் மனைவி ஆயிஷா முகர்ஜிக்கு டெல்லி குடும்பவியல் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், வசூலித்த பணத்தைத் திருப்பித் தரவும் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

 

ஷிகார் தவான் மற்றும் ஆயிஷா முகர்ஜிக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு விவாகரத்து வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய நீதிமன்றம் தவானின் மொத்த சொத்து மதிப்பில் 15 சதவீதத்தை ஆயிஷாவுக்கு வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி குடும்பவியல் நீதிமன்றத்தில் தவான் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பில், “தவான் மற்றும் ஆயிஷாவின் திருமணம் இந்திய சட்டப்படி பதிவு செய்யப்பட்டது. எனவே, இந்த விவகாரத்தில் முடிவெடுக்க ஆஸ்திரேலிய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. அந்த நீதிமன்றத்தின் சொத்துப் பகிர்வு ஒப்பந்தம் செல்லாது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இதுபற்றி நீதிமன்றம் தனது தீர்ப்பில் மேலும் கூறியதாவது, திருமணமான சில காலத்திலேயே தவானின் புகழைக் கெடுத்துவிடுவேன் என மிரட்டி, அவரது பணத்தில் வாங்கிய சொத்துக்களைத் தன் பெயருக்கு மாற்ற ஆயிஷா கட்டாயப்படுத்தியுள்ளார். அச்சுறுத்தல் மற்றும் மோசடி மூலம் தவானிடமிருந்து பெற்ற ரூ.5.7 கோடியை, 9 சதவீத ஆண்டு வட்டியுடன் ஆயிஷா முகர்ஜி திருப்பித் தர வேண்டும்.

மிரட்டல் மற்றும் ஏமாற்று வேலைகள் மூலம் தவானிடமிருந்து பெறப்பட்ட கையெழுத்துகள் செல்லாதவை. இந்தியச் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு திருமணத்தில், ஆஸ்திரேலிய குடும்பச் சட்டம் தலையிடுவது இந்தியப் பொதுக் கொள்கை மற்றும் இந்து திருமணச் சட்டத்திற்கு முரணானது.

2010-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான ஷிகார் தவான், கடந்த ஆகஸ்ட் 2024-ல் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார். தற்போது ‘Da One Sports’ என்ற விளையாட்டு அகாடமி மற்றும் தனது அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட இக்கட்டான காலங்களைத் தாண்டி, சமீபத்தில் தற்போது சோபி ஷைன் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.

மேலும் திருமணத்தை தொடர்ந்து நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஷிகார் தவானுக்கு மிகப்பெரிய சட்டப் போராட்ட வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.