ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில், இலங்கை அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. இத்தோல்வியின் மூலம் இலங்கை அணி அதிகாரப்பூர்வமாக தொடரிலிருந்து வெளியேறியது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, ஒருகட்டத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இருப்பினும், கீழ்வரிசை வீரர்களின் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 168 ரன்களை எட்டியது. 169 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு, நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான சுழற்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர்.

குறிப்பாக, பகுதிநேர சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமான ரச்சின் ரவீந்திரா, தனது முதல் ஓவரிலேயே குசல் மெண்டிஸின் விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். அவர் தனது 3 ஓவர் ஸ்பெல்லில் 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிட்செல் சான்ட்னர் (1/19) மற்றும் கிளென் பிளிப்ஸ் (1/21) ஆகியோரும் துல்லியமாகப் பந்துவீசி ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினர்.

இலங்கை அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, மைதானத்தில் ஒரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்தது. சான்ட்னர் வீசிய பந்தில் கமிந்து மெண்டிஸ் அடித்த பந்தை, எல்லையருகே நின்றிருந்த கிளென் பிளிப்ஸ் அபாரமாக கேட்ச் பிடித்தார். கேட்ச் பிடித்த கையோடு, மைதானத்தில் அமைதியாக இருந்த இலங்கை ரசிகர்களை நோக்கித் திரும்பி, ‘நாகினி’ (பாம்பு) நடனம் ஆடி அவர்களை கிண்டல் செய்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by OMEN (@omen10202)

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி குரூப்-பி பிரிவில் வலுவான நிலையில் உள்ளது. பாகிஸ்தானை விட அதிக ரன் விகிதத்தைக் (Net Run Rate) கொண்டுள்ளதால், இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். ஒருவேளை குறைந்த ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், ரன் விகிதம் சாதகமாக இருப்பதால் நியூசிலாந்தின் வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது. அதே சமயம், பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பைப் பெற வேண்டுமானால், இலங்கை அணிக்கு எதிராக மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில்உள்ளது.