தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் பி.டெக். இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஜோதி ஸ்ரவன் சாய் (20), இவரது காதலியின் குடும்பத்தினர் திருமணப் பேச்சுவார்த்தைக்காக அழைத்து போது கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவருக்கும், பீரம் கூடாவைச் சேர்ந்த ஸ்ரீஜா (19) என்ற பெண்ணுக்கும் இடையே இருந்த காதலை ஸ்ரீஜாவின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்த நிலையில், சம்பவத்தன்று திருமணப் பேச்சுவார்த்தைக்காக ஸ்ரவனை வீட்டிற்கு அழைத்துள்ளனர்.

அவர் வந்ததும், ஸ்ரீஜாவின் தாய் உட்பட அவரது குடும்பத்தினர் கிரிக்கெட் மட்டையால் கொடூரமாகத் தாக்கியதில் தலையில் காயம், கால் மற்றும் விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அமீன்பூர் போலீசார், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கிரிக்கெட் மட்டையைக் கைப்பற்றியுள்ளதுடன், ஸ்ரீஜாவின் பெற்றோர்கள் உட்பட 4 பேரைக் கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.