திருமணம் என்றாலே அன்பை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாகவும், விருந்தினர்களை உபசரிப்பதாகவும் இருக்கும். ஆனால், அமெரிக்காவில் உள்ள ஒரு புதுமணத் தம்பதியினர் தங்கள் திருமணத்திற்கு வந்த விருந்தினர்களிடம் ஒருநாள் விருந்துச் சாப்பாட்டிற்கு தலா 25 டாலர்கள் (சுமார் ₹2,000க்கும் மேல்) கட்டணம் செலுத்துமாறு கேட்டுள்ளனர். இந்த வினோதமான கோரிக்கை Reddit சமூக வலைதளத்தில் விவாதப் பொருளானது. பெரும்பாலான திருமணங்களில் உணவு இலவசமாக வழங்கப்படும் என்ற மரபுக்கு எதிராக இந்தத் தம்பதி பணம் கேட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தத் தம்பதியின் நண்பர்களில் ஒருவரான மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர், அரசு உணவு உதவிகளை (Food Stamps) நம்பி வாழ்பவர். தன்னால் இந்த 25 டாலரைக் கட்டணமாகச் செலுத்த முடியாது என்று அவர் மிகவும் மரியாதையாகத் திருமண அழைப்பை மறுத்துள்ளார். ஆனால், அதை ஏற்றுக் கொள்ளாத அந்தத் தம்பதி, அந்தப் பெண்ணிடம் சண்டையிட்டு, அவர் பணம் கொடுக்க மாட்டேன் என்று சொல்வது ‘பைத்தியக்காரத்தனம்’ என்றும், ‘விரோதப் போக்கு’ என்றும் கடுமையாகப் பேசியுள்ளனர். பணம் கட்ட முடியாவிட்டால், “உங்களுக்கான உணவை நீங்களே எடுத்து வாருங்கள்” என்றும் கூறியுள்ளனர்.

இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் அந்த மாற்றுத்திறனாளிப் பெண் Reddit தளத்தில் பகிர்ந்தபோது, அது பயங்கரமாக வைரலானது. பலர் அந்தத் தம்பதியினரின் செயலைக் கண்டித்து, “விருந்தினர்களை உபசரிக்க வசதி இல்லையென்றால், நீங்கள் திருமணம் செய்யக்கூடாது,” என்றும், “விருந்தினர்களிடம் பணம் வசூலிப்பது மிக மோசமான செயல்” என்றும் கடுமையாக விமர்சித்துள்ளனர். திருமணச் செலவுகளுக்கு விருந்தினர்களைப் பயன்படுத்துவது முற்றிலும் தவறானது என்று பலரும் கொந்தளித்து, அந்தத் தம்பதியின் மீது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.