வடமேற்கு தென் ஆப்பிரிக்காவில் ஒரு பெரிய ஆண் சிங்கம், நகர்ந்து கொண்டிருக்கும் போக்குவரத்து லாரியின் கூரையிலிருந்து திடீரெனக் கீழே குதித்த வீடியோ இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் விலங்குகள் இடமாற்றம் செய்யப்படும்போது அவற்றின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து விலங்குப் பாதுகாப்பு அமைப்புகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சிங்கம், ‘ஃபிரீ ஸ்டேட்’ பகுதியில் இருந்து வாங்கப்பட்டு, வடமேற்கில் உள்ள ஒரு விளையாட்டுப் பண்ணைக்கு (game farm) கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வீடியோவில், மயக்க மருந்தின் (sedation) தாக்கத்தில் இருந்த சிங்கம், லாரியின் கூரையின் மீது நிற்பதும், பின்னர் தரையில் பாய்வதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. சிங்கம் தப்பித்ததையடுத்து, லைட்டன்பர்க் மற்றும் சீரஸ்ட் இடையேயான சாலையில் டாக்டர். அன்டன் நெல் உதவிக்கு அழைக்கப்பட்டார். அவர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, சிங்கம் ஒரு மரத்தடியில் புற்களின் நடுவே படுத்துக் கிடந்ததாகவும், அதன் உடலில் இன்னும் மயக்க மருந்து (sedation) இருந்ததாகவும் அவர் கூறினார்.

சிங்கத்தின் மீது மயக்க ஊசி செலுத்திய பிறகு, அது சற்று தூரம் நடந்து சென்று படுத்து உறங்கிவிட்டது. அதன் பிறகு, எந்தவிதச் சிக்கலும் இன்றி சிங்கம் பாதுகாப்பாக லாரியில் ஏற்றப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, வனவிலங்குகளின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை வலுவாகச் செயல்படுத்துவது அவசியம் என்று ஃபோர் பாஸ் அமைப்பு வலியுறுத்துகிறது.