நியூசிலாந்தில் ஒரு 13 வயது சிறுவன், ஆன்லைன் வாயிலாக வாங்கிய சக்திவாய்ந்த காந்தங்களை விழுங்கியதால், சிக்கலான அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவன், டெமு (Temu) என்ற பிரபலமான ஆன்லைன் சந்தை மூலம் சுமார் 80 முதல் 100 சிறிய, சக்திவாய்ந்த காந்தங்களை (magnets) ஆர்டர் செய்து விழுங்கியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுவனின் உடலில் இருந்த அனைத்துக் காந்தங்களையும் அகற்ற அவரது குடலின் ஒரு பகுதியை மருத்துவர்களால் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

​நியூசிலாந்து நாட்டில், சிறிய மற்றும் சக்திவாய்ந்த காந்தங்களை வீடுகள் அல்லது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக விற்பது 2014 ஆம் ஆண்டு முதலே தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கல்வி நிறுவனங்கள் மற்றும் சில தயாரிப்புகளுக்கு மட்டும் இவற்றை பயன்படுத்த அனுமதி உண்டு. இந்தச் சிறுவன் விழுங்கிய காந்தங்கள், குழந்தைகளுக்கு ஏற்ற ‘ஃப்ட்ஜெட் டாய்ஸ்’ அல்லது வடிவங்களை உருவாக்க உதவும் விளையாட்டுப் பொருட்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. ஆக்லாந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் அலெக்ஸ் சிம்ஸ் கூறுகையில், இந்தச் சிறிய மற்றும் வண்ணமயமான பந்துகள் போன்ற காந்தங்கள் குழந்தைகளை எளிதில் கவரும் வகையில் உள்ளன. இதன் காரணமாகவே, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் இவற்றை விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

​சிறுவன் விழுங்கியது குறித்து நியூசிலாந்து மருத்துவ இதழில் (New Zealand Medical Journal) மருத்துவர்கள் எழுதியுள்ளனர். சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு இந்தச் சிறுவன் காந்தங்களை விழுங்கிய நிலையில், நான்கு நாட்களாக வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் மிகவும் அலாரமிங் (Alarming) ஆனது என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். காரணம், ஆன்லைன் சந்தைகள் மூலம் குழந்தைகள் மிகக் குறைந்த விலையில் இத்தகைய அபாயகரமான பொருட்களை எளிதில் பெற முடிகிறது. இதனால், நாட்டில் இருக்கும் விற்பனைத் தடையை முறையாக அமல்படுத்துவது சவாலாக உள்ளது என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.