இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றான சவூதி அரேபியாவில், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தன்னை அடிமையாக வைத்திருப்பதாகவும், ஊர் திரும்ப இயலவில்லை எனவும் கதறி அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஒட்டகங்கள் நிறைந்த பாலைவனப் பகுதியில் இருந்து போஜ்புரி மொழியில் பேசிய அந்த நபர், “நான் அலகாபாத் கிராமத்தைச் சேர்ந்தவன்… சவூதிக்கு வந்தேன். கபில்தான் எனது பாஸ்போர்ட்டை வைத்துள்ளார்.

நான் ஊருக்குப் போக வேண்டும் என்று சொன்னால், அவர் என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். என்னைக் காப்பாற்ற உதவுங்கள்,” எனப் பிரதம மந்திரியைச் சென்றடையும்படி கோரிக்கை வைத்தார். இந்த வீடியோ டெல்லியைச் சேர்ந்த குற்றவியல் வழக்கறிஞர் கல்பனா ஸ்ரீவஸ்தவா என்பவரால் பகிரப்பட்டு, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு டேக் செய்யப்பட்டது.

இந்த வீடியோ பரவலான கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் இதுகுறித்து ஒரு அறிக்கையை எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ளது. “அந்த நபரின் இருப்பிடத்தைக் கண்டறிய தூதரகம் முயற்சி செய்து வருகிறது. ஆனால், வீடியோவில் சவூதி அரேபியாவில் அவர் இருக்கும் இடம், மாகாணம், தொடர்பு எண் அல்லது முதலாளியின் விவரங்கள் எதுவும் இல்லாததால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை,” என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வீடியோவைப் பகிர்ந்த வழக்கறிஞர் கல்பனா ஸ்ரீவஸ்தவாவை டேக் செய்து, “நீங்கள் வெளியிட்ட வீடியோவின் மூலத்தில் இருந்து கூடுதல் விவரங்களைத் திரட்டி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” எனவும் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர் பிரயாக்ராஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று வீடியோவில் குறிப்பிட்டதால், உத்தரப் பிரதேச மாநில அதிகாரிகளிடமும் இந்தியத் தூதரகம் தொடர்புகொண்டுள்ளது.

“அந்த நபர் பிரயாக்ராஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று கூறுவதால், பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் அவரது குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை எழுதி அனுப்புமாறு அறிவுறுத்தலாம்,” எனவும் தூதரகம் கூறியுள்ளது. அந்த நபரின் குடும்பத்தினர் உட்பட, நம்பகமான தகவல் வைத்திருப்பவர்கள் யாரும் உடனடியாகத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.