இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதல், ஏற்கனவே நடந்த திருமணத்தை மறைத்ததால் பெரிய சர்ச்சையாக மாறி, இரண்டு கணவர்களையும் இழந்து நிர்கதியாக நின்ற பெண்ணை குழந்தைகளுடன் போலீசார் சொந்த ஊருக்கு அனுப்பிய பரபரப்பு சம்பவம் நெல்லை மாவட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நெல்லை, அம்பாசமுத்திரம் அருகே சிவந்திபுரத்தைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர், சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி கணவரும், 15 வயது மகளும், 13 வயது மகனும் இருந்த நிலையில், குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைத்து சென்னையில் வாழ்ந்து வந்தார்.

ஒரு ஆண்டுக்கு முன்பு, நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் சேர்ந்த 34 வயது பெங்களூரு ஐ.டி. என்ஜினீயருடன் இன்ஸ்டாகிராமில் இவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. இந்தப் பெண், தனக்கு 30 வயது தான்… இன்னும் திருமணம் ஆகவில்லை என்று பொய்யாக கூறியதால், அந்த என்ஜினீயர் அவரை நேசிக்கத் தொடங்கினார்.

பின்னர் இந்தக் காதலை பெற்றோர்களிடம் கூறி சம்மதம் பெற்று, கடந்த 30 ஆம் தேதி பாண்டமங்கலம் காசி விஸ்வநாதர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மணமகன் வீட்டார் திரளாக கலந்து கொண்ட நிலையில், மணமகள் தரப்பில் பெயரளவில் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

இருவரும் திருமண போட்டோ, வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர். இதைப் பார்த்த முதல் கணவர் அதிர்ச்சியடைந்து உறவினர்களுடன் நேராக சிவந்திபுரத்துக்கு சென்று, குழந்தைகளை அழைத்து பாண்டமங்கலத்துக்கு வந்தார். புதிய கணவர் வீட்டில் ஏற்பட்ட மோதலில், முதல் கணவர் தரப்பு, பெண்ணை சரமாரியாக தாக்கினர். விசாரிப்பில், அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் மற்றும் இரண்டு குழந்தைகள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதனால் புதுமாப்பிள்ளை வீட்டாரும் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே அனைவரும் அந்தப் பெண்ணை பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு: இரண்டாவது கணவர், தன்னை ஏமாற்றியதால், பெண்ணிடம் இருந்து 5 பவுன் தாலி சங்கிலியை பெற்றுக்கொண்டார். மேலும், “ஏற்கனவே ரூ.5 லட்சம் செலவு செய்தேன்… இனி அவளுடன் வாழ முடியாது” என்று கூறிவிட்டு ஏமாற்றத்துடன் சென்றார்.

இதேபோன்று முதல் கணவரும், “இப்போது எனக்கும் அவள் தேவையில்லை… குழந்தைகளை அவளே பார்த்துக்கொள்ளட்டும்” என்று கூறி, குழந்தைகளையே போலீசில் ஒப்படைத்து அங்கிருந்து புறப்பட்டார். இரண்டு கணவர்களையும் இழந்து தனித்து நின்ற அந்தப் பெண்ணை, போலீசார் குழந்தைகளுடன் சொந்த ஊருக்குச் செல்ல ஏற்பாடு செய்து, “இனிமேல் இத்தகைய மோசடிகளில் ஈடுபடக்கூடாது” என்று கடுமையாக எச்சரித்தனர். மேலும் இந்தச் சம்பவம், சமூக ஊடகங்களில் உருவாகும் உறவுகள் எந்த வகையில் பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்பதற்கான இன்னொரு எடுத்துக்காட்டாகியுள்ளது.