தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு ‘மூடநம்பிக்கை’ என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தரவுத் துறைத் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் திமுகவின் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் இத்திட்டமே மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க உதவும் என்று கூறி வரும் நிலையில், அதற்குப் பதில் அளிக்கும் வகையில் பிரவீன் சக்ரவர்த்தி சில புள்ளிவிவரங்களை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இதே போன்ற நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டங்களை அறிவித்த ஒன்பது பெரிய மாநிலங்களில், நான்கு மாநில அரசுகள் மட்டுமே மீண்டும் வெற்றி பெற்றதாகவும், ஐந்து மாநிலங்களில் ஆளும் கட்சிகள் தோல்வியைத் தழுவியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நலத்திட்டங்கள் மட்டுமே மக்களின் வாக்குகளைப் பெற்றுத் தந்துவிடாது என்றும், ஒட்டுமொத்த ஆட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் சூழலே வெற்றியைத் தீர்மானிக்கும் என்றும் அவர் தனது கருத்தில் வலியுறுத்தியுள்ளார். திமுக முன்னெடுக்கும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை ஒரு முக்கிய மைல்கல்லாக அக்கட்சியினர் கூறுகின்றன.

மேலும் காங்கிரஸ் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ள இந்த விமர்சனம் கூட்டணி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கப் பல்வேறு காரணிகள் உள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட திட்டத்தை மட்டுமே அதீதமாக நம்பியிருப்பது சரியாக இருக்காது என்பதே பிரவீன் சக்ரவர்த்தியின் வாதமாக உள்ளது.