தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தீவிரமடைந்துள்ள நிலையில், மாற்று கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் ஆளுங்கட்சியான திமுக-வில் இணைவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்று (பிப்.15) திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பிரம்மாண்டமான கட்சி இணைப்பு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு மாற்று கட்சிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது தாய் கட்சிகளில் இருந்து விலகி, திமுக எம்பி தரணிவேந்தன் முன்னிலையில் தங்களை திமுக-வில் இணைத்துக் கொண்டனர்.

​இந்த இணைப்பு விழாவின் போது பேசிய எம்பி தரணிவேந்தன், “மக்களின் ஆதரவு திமுக-வுக்கு இருப்பதை இந்த இணைப்பு உறுதி செய்கிறது” எனத் தெரிவித்தார். வந்தவாசி பகுதியில் எதிர்க்கட்சிகளுக்கு இது ஒரு பலத்த அடியாகக் கருதப்படுகிறது. தேர்தல் நேரத்தில் தொகுதி வாரியாக நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுக்கும் திமுக-வின் இந்த உத்தி, மற்ற கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் மாற்றத்தால் வந்தவாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திமுக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.