தமிழக அரசியலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தமிழக வாழ்வுரிமை கட்சி (தவாக), வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கூட்டணியில் இருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்ச்சியைத் தவாக தலைவர் வேல்முருகன் புறக்கணித்திருப்பது இந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாகத் தனது கட்சி மாவட்டச் செயலாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்திய வேல்முருகனிடம், பெரும்பாலான நிர்வாகிகள் திமுக கூட்டணியில் நீடிக்க விருப்பமில்லை என்றும், தொகுதிப் பங்கீட்டில் தவாக தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் வெளிப்படையாகவே அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, திமுக கூட்டணியில் இருந்து அதிருப்தியில் இருக்கும் கட்சிகளை இழுக்கத் தயாராக இருக்கும் அதிமுக தரப்பு, வேல்முருகனைத் தங்கள் பக்கம் கொண்டு வர ரகசியமாகத் தூது விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வட மாவட்டங்களில் கணிசமான செல்வாக்கு கொண்டுள்ள தவாக, அதிமுக பக்கம் சாய்ந்தால் அது திமுக கூட்டணிக்குப் பெரும் பின்னடைவாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். “உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இல்லை” என்கிற ஆதங்கத்தில் இருக்கும் வேல்முருகன், விரைவில் தனது அதிகாரப்பூர்வ முடிவை அறிவிக்கப் போவதாகத் தகவல்கள் கசிகின்றன. இதனால் திமுக – அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் வேல்முருகனின் அடுத்த கட்ட நகர்வை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
