தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பலத்தைப் பெருக்கிக் கொள்ளும் வகையில், மாற்றுக் கட்சியினரைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை பம்பரமாகச் சுற்றிச் சுழன்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவதால், தமிழக அரசியல் சூழல் பெரும் பரபரப்பான நிலையை எட்டியுள்ளது.

​இதன் ஒரு பகுதியாக, சேலம் சூரமங்கலம் பகுதி 20-வது டிவிஷனில் அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர், அக்கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் பார்த்திபன் முன்னிலையில் நடைபெற்ற இந்த இணைவு விழாவானது, அந்தப் பகுதியில் தவெக-வின் வளர்ச்சியையும், தேர்தல் நேரத்தில் அக்கட்சி காட்டும் முனைப்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.