நடிகர் விஜய் அரசியலுக்குப் புதியவர் என்பதால் அவருக்குச் சரியான வழிகாட்டுதல் இல்லை என்றும், ‘ஜனநாயகன்’ பட விவகாரத்தில் திமுக இரட்டை லாபம் அடைந்து வருவதாகவும் பாஜக மாநிலச் செயலாளர் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாசாரப் பிரிவு சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அந்தப் பிரிவின் மாநிலச் செயலாளர் நடிகை கஸ்தூரி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திரைப்படங்களில் அரசியல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இல்லாதவரை தணிக்கைக் குழுவில் (Censor) எந்தப் பிரச்சினையும் வராது. ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த மே மாதமே முடிவடைந்துவிட்டது. ஆனால், டிசம்பர் மாதம் வரை தணிக்கைக்கு அனுப்பப்படவில்லை. இப்படத்தில் ராணுவ மற்றும் தேசிய அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதற்குத் தேவையான தடையில்லாச் சான்றிதழை (NOC) படக்குழுவினர் பெறவில்லை.
விஜய் அரசியலுக்குப் புதியவர் என்பதால் அவருக்குப் போதிய அனுபவம் இல்லை. தவறான வழிகாட்டுதல்கள் காரணமாகவே சென்சார் விவகாரத்திற்காக நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே தனது அரசியல் எதிரிகள் என்று கூறுகிறார். ஜனநாயகன் படத்திற்குத் தடைகள் வரலாம் என்பதை அவர் முன்கூட்டியே யூகித்திருக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் திமுக-வுக்கு ‘இரண்டு லட்டு’ கிடைத்தது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்று விஜய்க்குப் பண நஷ்டம் ஏற்படுகிறது; மற்றொன்று, அந்தப் பழியை பாஜக மீது திமுக எளிதாகப் போட்டுவிடுகிறது. மத்திய அரசு எப்போதும் நியாயமாகவே நடக்கிறது.
சொந்தப் படப் பிரச்சினைக்கே அமைதியாக இருக்கும் விஜய், மக்களின் பிரச்சினைகளுக்காக எப்படிப் பேசுவார்? த.வெ.க. நிர்வாகிகள் யாரும் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக-வுக்கு எதிராக உள்ள அனைத்துக் கட்சிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. இவ்வாறு நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.
