தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, திமுக அமைச்சர் கே.என்.நேரு மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பணி நியமனங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை (ED), தமிழக காவல்துறை டிஜிபி-க்கு கடிதம் எழுதியிருந்தது. இதன் தொடர்ச்சியாக, அமைச்சர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பத்துரை தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தற்போது இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே தமிழக அமைச்சரவையில் இருந்த செந்தில் பாலாஜி பணமோசடி வழக்கில் சிக்கிச் சிறை சென்ற நிலையில், தற்போது மற்றொரு முக்கிய அமைச்சரான கே.என்.நேரு மீது நீதிமன்றம் இத்தகைய உத்தரவைப் பிறப்பித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறையில் நடந்ததாகக் கூறப்படும் இந்த முறைகேடு தொடர்பான விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறை தீவிரப்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
