தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள நேரடி மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரின் சமீபத்திய கருத்துகளைக் கடுமையாகச் சாடினார். அவர் கூறியதாவது, “மாணிக்கம் தாகூர் பேசுவது கூட்டணியில் தேவையற்ற நெருடல்களை ஏற்படுத்துகிறது. ராமநாதபுரத்தில் இருவர் சண்டை போட்டுக் கொள்வது போன்ற பாணியில் அவர் பேசுகிறார். காங்கிரஸ் கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே உட்கட்சிப் பூசலும், கலகக்குரலும் அவர்களுக்குப் பழகிப்போன ஒன்று. உட்கட்சி விவகாரத்தில் கதர் சட்டைகள் கிழிபடுவது ஒன்றும் புதிதல்ல.

காங்கிரஸ்காரர்கள் ஒரே நேரத்தில் ஒன்பது குரல்களில் பேசுவார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. அவர்கள் ஆட்சி அதிகாரம் கேட்பதை திமுக ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றார்.

வைகோவின் இந்த விமர்சனம் சமூக வலைதளங்களில் விவாதமான நிலையில், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் வைகோவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: “கூட்டணி குறித்துப் பேசக் கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒற்றை வார்த்தைக்கு மரியாதை கொடுத்து, இதைக் கடந்து போகிறேன். அண்ணன் வைகோ அவர்களே… இது பொறுமைதானே தவிர, பயம் அல்ல என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் சமீபகாலமாக மாணிக்கம் தாகூர் எம்.பி., திமுகவைச் சீண்டும் வகையிலும், ‘ஆட்சியில் பங்கு’ கோரியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இது கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியதால், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இது குறித்து அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் புகார் அளித்தார். மேலிடத்தின் தலையீட்டிற்குப் பிறகே மாணிக்கம் தாகூர் தற்போது மவுனம் காப்பதாகக் கூறப்படுகிறது.