ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தைச் சேர்ந்த தேவிஸ்ரீ (21) என்ற மாணவி, பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியில் பி.பி.எம். படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் காலை, இவர் தனக்குப் பழக்கமான பிரேம் வர்தன் என்ற வாலிபருடன், பெங்களூரு வடக்கு தாலுகாவின் உள்ள தோழியின் அறைக்குச் சென்றார்.
அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில், தேவிஸ்ரீயின் தோழி அறையில் இருந்து வெளியே சென்றிருந்தபோது, மாணவி தேவிஸ்ரீயை பிரேம் வர்தன் கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுபற்றி தகவல் அறிந்த மத நாயக்கனஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த தேவிஸ்ரீயின் உடலைக் கைப்பற்றினர். இந்தக் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பிரேம் வர்தனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தேவிஸ்ரீயை கொலை செய்ததற்கான காரணம் என்ன? இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை இருந்தது? என்பது பிரேம் வர்தன் கைது செய்யப்பட்ட பின்னரே தெரியவரும். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு தேவிஸ்ரீயின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பெங்களூரு வந்த அவரது பெற்றோர் மகளின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
