சத்தீஷ்கார் மாநிலம் ஜஷ்பூர் மாவட்டத்தில் உள்ள பகிஷா பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் குல்திபன் டாப்னோ பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதன் காரணமாக மனமுடைந்த அந்த மாணவி, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பள்ளி வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மாணவியின் இறப்பு குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். அதில், தனது தற்கொலைக்கு தலைமை ஆசிரியர் குல்திபனே காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, தலைமை ஆசிரியர் குல்திபன் டாப்னோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
