சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளைப் பெறுவதற்காகக் காத்திருந்தபோது, அதைக் கொண்டு வந்த டெலிவரி ஊழியரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அந்த ஊழியர், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.

மேலும் இளம்பெண் தண்ணீர் எடுத்து வர உள்ளே சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்த அவர், பெண்ணிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கூச்சலிட்டதால், அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில், அமைந்தகரை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், அயனாவரத்தைச் சேர்ந்த லோகேஷ் என்ற அந்த டெலிவரி ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் தனிமையில் இருக்கும் பெண்களைக் குறிவைத்து இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். தற்போது இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.