தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தில், கள்ளத்தொடர்பு விவகாரத்தால் கணவர் மற்றும் அக்காவை மனைவி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமுதா என்பவரது கணவர் சிதம்பரம், அமுதாவின் அக்காவான கண்ணம்மாவுடன் நீண்டகாலமாக கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் இருவரும் ஒரே வீட்டில் தங்கி அமுதாவிற்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததால், ஆத்திரம் அடைந்த அமுதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இந்தக் கொடூரச் செயலில் பலத்த தீக்காயமடைந்த சிதம்பரம் மற்றும் கண்ணம்மா, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். தீ வைத்தபோது அமுதாவின் கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டதால், அவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பேராவூரணி போலீசார், அமுதாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப உறவுகளுக்குள் ஏற்பட்ட இந்தச் சோகமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
