மீண்டும் தாய்லாந்து- கம்போடியா எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. தாய்லாந்துப் படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் பலியானதாகவும், பல பொதுமக்கள் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஏற்கெனவே நடந்த சண்டைக்குப் பிறகு ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தை இரு நாடுகளும் மீறியதாகப் பரஸ்பரம் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த மோதல் மீண்டும் வெடித்துள்ளது.

பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியின் போது வரையப்பட்ட எல்லைக் கோடுகள் தொடர்பான நீண்டகாலப் பிறகே இந்தக் கலகத்திற்குக் காரணம். இதில், பல கோயில்களும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் சர்ச்சைக்குரியதாக உள்ளன. ஜூலை மாதம் நடந்த சண்டையில் 43 பேர் பலியானதோடு, 3 லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நேரிட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் இந்தத் தாக்குதல் மூலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. இந்தப் புதிய மோதல் பேச்சுவார்த்தைகளை ரத்து செய்யுமோ என்ற அச்சத்தில் எல்லைப்புற மக்கள் உள்ளனர்.