திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, ஆடு மேய்க்காத காரணத்திற்காக 4 மாதங்களுக்கு முன்பு ஒரு சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டு கோழிப்பண்ணை அருகே புதைக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில், பாதிக்கப்பட்ட வெண்ணிலா என்ற பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் ஆட்டுப்பண்ணை ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டு, கடந்த நான்கு மாதங்களாகக் கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அந்த கொடூர பண்ணையில் இருந்து எப்படியோ தப்பித்து வந்த வெண்ணிலா, திருத்தணி காவல் நிலையத்தில் கண்ணீருடன் கொடுத்த பகீர் புகாரைத் தொடர்ந்து இந்த கோரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் உடனடியாகச் செயல்பட்ட திருத்தணி போலீசார், கோழிப்பண்ணை அருகே சிறுவன் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்திற்கு விரைந்து சென்று, உடலைத் தோண்டி எடுத்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
ஆடு மேய்க்காத ஒரே காரணத்திற்காகச் சிறுவனை அடித்துக் கொன்று, அவரது குடும்பத்தையே நான்கு மாதங்கள் சிறை வைத்துச் சித்ரவதை செய்துள்ள இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்ட பண்ணை உரிமையாளர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்களைக் கைது செய்யக் கோரி கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், போலீசார் இந்த கொலை வழக்கைக் கையில் எடுத்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
