திருவாரூர் மாவட்டம் சேங்காளிபுரம் பகுதியில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூரக் கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் உலுக்கியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் செங்கல் சூளையில் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டில் வழக்கம் போல தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென ஆயுதங்களுடன் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த 6 பேர் கொண்ட மர்மக் கும்பல், தூங்கிக் கொண்டிருந்த திருமுருகனை கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கியது. அந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் திருமுருகனை துடிக்க துடிக்க கொடூரமான முறையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது.

​இந்த கோரப் படுகொலை திருமுருகனின் பெற்ற மகள் கண்முன்னே நடந்துள்ளது நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது. தனது தந்தையை மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டுவதைக் கண்டு அலறியடித்த மகள், ரத்த வெள்ளத்தில் துடித்த தந்தையைக் காப்பாற்ற முடியாமல் கதறி அழுத சம்பவம் அந்தப் பகுதியையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், திருமுருகனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து கொலை செய்துவிட்டுத் தப்பிய அந்த 6 பேர் கொண்ட கொலையாளி கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.