“செய்வினை உடனே சுடும்” (Instant Karma) என்ற பழமொழிக்கு ஏற்ப, சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது, அவரது நடமாட்டத்தைக் கவனித்த மோட்டார் சைக்கிளில் வந்த திருடன் ஒருவன், திடீரென அப்பெண்ணின் கையில் இருந்த பையை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றான். இதனை அந்த வழியாக கார் ஓட்டி வந்த நபர் ஒருவர் கவனித்துவிட்டார். கண நேரமும் தாமதிக்காத அந்த கார் ஓட்டுநர், தனது காரை வேகமாகச் செலுத்தி திருடனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதினார். இதில் நிலைதடுமாறி திருடன் கீழே விழுந்தான்.

 

காரின் மோதலால் கீழே விழுந்தாலும் விடாத அந்தத் திருடன், மீண்டும் மோட்டார் சைக்கிளை எழுப்பி தப்பிக்க முயன்றான். ஆனால், அவனை விடுவதாக இல்லாத அந்த கார் ஓட்டுநர், மீண்டும் தனது காரால் அவனை முட்டி நிறுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த திருடன், பயந்துபோய் திருடிய பையை அங்கேயே போட்டுவிட்டு, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கால்கடுக்க ஓட்டம் பிடித்தான். திருடன் ஓடிய பிறகும், கார் ஓட்டுநர் தனது காரை ‘ரிவர்ஸ் கியரில்’ அதிவேகமாக இயக்கி, அந்தத் திருடனை துரத்திய விதம் அங்கிருந்தவர்களை வாயடைத்துப் போகச் செய்தது. இந்தத் துணிச்சலான கார் ஓட்டுநரின் வீடியோ ‘எக்ஸ்’ தளத்தில் வெளியாகி, தற்போது நெட்டிசன்களின் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.