பல மைனர் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சர்வதேச குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தமக்கு இருந்த தொடர்புகள் குறித்து, மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் மூடிய அறை கூட்டத்தில் நேரில் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். எப்ஸ்டீனின் கொடூரமான பாலியல் குற்றங்கள் குறித்து தனக்கு ஆரம்பத்தில் முழுமையாகத் தெரியாது என்றும், தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் நோக்கிலேயே அவனைத் தான் சந்தித்ததாகவும் பில் கேட்ஸ் கமிட்டியிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், தனது ரகசிய திருமண உறவு குறித்த விபரங்களை வைத்துக்கொண்டு, எப்ஸ்டீன் தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்ததாக பில் கேட்ஸ் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். தன்னுடன் மீண்டும் தொழில் தொடர்புகளைத் தொடர வேண்டும் என்பதற்காகவே எப்ஸ்டீன் தன் மீது அழுத்தம் கொடுத்ததாகவும், இந்த விவகாரத்தால் தனது குடும்பம் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பில் கேட்ஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு வெளியிடப்பட்ட ரகசிய ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் எப்ஸ்டீன் சிறையில் இருந்து விடுபட்ட பிறகும் பில் கேட்ஸ் அவனை பலமுறை சந்தித்தது அம்பலமாகியுள்ளது. இதற்கிடையே, எப்ஸ்டீனுடன் தங்கள் ஊழியர்களுக்கு இருந்த தொடர்புகள் குறித்து பில் கேட்ஸ் அறக்கட்டளையும் தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ‘ஹவுஸ் ஓவர்சைட் கமிட்டி’ தலைவர் ஜேம்ஸ் கோமர் அனுப்பிய சம்மனின் பேரில் பில் கேட்ஸ் இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளார். மேலும், எப்ஸ்டீனின் இந்த ரகசியப் பட்டியலில் பில் கேட்ஸ் மட்டுமன்றி, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உட்பட அரசியல், வணிகம் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த உலகின் பல முன்னணி விஐபிக்களின் பெயர்களும், புகைப்படங்களும் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.