ஈரான் மீது அமெரிக்கா நடத்திய அடுத்தடுத்த வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலக நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையில் ‘ஹார்முஸ் நீரிணை’ கடல் வழித்தடத்தை முழுமையாக மூடுவதாக ஈரான் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கிய வழித்தடமாக விளங்கும் இப்பகுதியில், வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டாங்கர்கள் உள்ளிட்ட எந்தவொரு கப்பலும் நுழையக் கூடாது என்றும், இந்த உத்தரவை மீறும் கப்பல்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையையும் மீறி, சட்டவிரோதமாக அந்த எல்லையைக் கடக்க முயன்ற 2 வணிகக் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. ஈரானால் தாக்கப்பட்ட அந்த இரண்டு கப்பல்களும் எந்த நாட்டைச் சேர்ந்தவை, அவற்றின் பெயர் என்ன மற்றும் அதில் இருந்த மாலுமிகளின் நிலை குறித்து தற்போதைக்கு எந்த விவரமும் வெளியாகாததால் உலக அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணையை நெருங்கும் எந்தவொரு கப்பலும் தங்களின் எதிரி நாடான அமெரிக்காவிற்கு ஒத்துழைப்பதாகக் கருதப்பட்டு, உடனடியாகத் தாக்கப்படும் என ஈரான் மீண்டும் அச்சுறுத்தியுள்ளது. ஆனால், மறுபுறம் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது என்ற ஈரானின் கூற்றை அமெரிக்கா முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுகுறித்து ஈரானின் ஐநா தூதர் அமீர் சயீத் இரவானி பேசுகையில், “அமெரிக்காவின் இத்தகைய மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் அல்லது ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே எவ்வித அமைதி உடன்படிக்கையையும் எட்ட முடியாது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் இரு வல்லரசு நாடுகளின் இந்த மோதல் போக்கினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, மூன்றாம் உலகப் போர் மூழுமோ என்ற அச்சமும் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.