நவி மும்பையில் தொடர்ந்து ஒரு வாரமாக நிலவிய கடுமையான மின்வெட்டால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், மின்சார வாரிய அலுவலகத்திற்குள் தலையணையுடன் சென்று வினோத போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. தினசரி காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கடினமாக உழைக்கும் அந்தப் பெண், இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால் மின்விசிறி கூட இல்லாமல் தூக்கத்தைத் தொலைத்து அவதிப்பட்டுள்ளார்.

மேலும் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், கண்ணீருடன் தனது குமுறலை வெளிப்படுத்திய அவர், “எங்கள் பகுதியில் மின்சாரம் இல்லை, ஆனால் உங்கள் அலுவலகத்தில் மின்சாரம் இருக்கிறது; அதனால் நான் இங்கேயே தூங்கிக் கொள்கிறேன்” என்று கூறி அதிகாரிகளை நோக்கி சாடியுள்ளார்.

“>

இந்த வினோதமான ‘தலையணைப் போராட்டம்’ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அடிப்படைத் தேவையான மின்சாரத்தைப் பெறுவதற்கே சாமானிய மக்கள் இது போன்ற போராட்டங்களை நடத்த வேண்டிய அவல நிலை உள்ளதாகப் பலரும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் நவி மும்பை போன்ற வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லை என்றும், மின் கட்டணங்களைச் சரியாக வசூலிக்கும் வாரியம் தடையற்ற மின்சாரத்தை வழங்கத் தவறுவது அநீதி என்றும் சமூக வலைதளப் பக்கங்களில் பொதுமக்கள் அந்தப் பெண்ணிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.