அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் சமூக ஊடகமான ‘எக்ஸ்’ (X)-இல் வெளியிட்ட ஓர் அறிக்கை தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதில், “பெருமளவிலான குடியேற்றம் அமெரிக்கத் தொழிலாளர்களின் வேலைகளைப் பறிக்கிறது,” என்று அவர் கூறியிருந்தார்.
இந்தக் கருத்துக்கள், வெளிநாட்டுக் குடிமக்களுக்கு எதிரானவை எனக் கூறிப் பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பையும் விமர்சனங்களையும் பெற்றன. இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த நெட்டிசன்கள், வான்ஸின் மனைவி உஷா வான்ஸும் ஒரு இந்தியக் குடியேறிதான் என்பதையும், இந்த லாஜிக்கின்படி அவரையும் இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டி வான்ஸின் கருத்தை விமர்சித்தனர்.

இதற்கிடையில், எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான வஜாஹத் அலி, வான்ஸின் பதிவுக்குப் பதிலளித்து, இதன் பொருள் நீங்கள் உங்கள் மனைவி உஷாவையும், அவரது இந்தியக் குடும்பத்தையும், உங்கள் இரட்டை குழந்தைகளையும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டியிருக்கும் என்று கிண்டலாகக் கூறினார்.
மேலும், கடந்த மாதம் வான்ஸ் தனது மனைவி உஷாவின் இந்து மத நம்பிக்கை குறித்துப் பேசியதும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. உஷா ஒரு நாள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவார் என்று நம்பிக்கை கொள்வதாக அவர் பேசியிருந்தார். வான்ஸின் இந்தக் குடியேற்றம் குறித்த கருத்து, ட்ரம்ப் நிர்வாகம் தனது குடியேற்றக் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கியுள்ள சூழலில் வெளியாகியுள்ளது.
