மழைநீரில் தவறி விழுந்து 2½ வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது மாங்காடு, ஜனனி நகர் இணைப்பு பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் குமார். அவரது மனைவி பிரியதர்ஷினி அம்பத்தூரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2½ வயது மகள் பிரணிகாஸ்ரீ உள்ளார்.
நேற்று மாலை, பிரியதர்ஷினி தனது மகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். சில நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது, அருகில் இருந்த மகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டின் வெளியில் தேடியபோது, அருகிலிருந்த காலி மைதானத்தில் தேங்கி இருந்த மழைநீரில் மகள் பிரணிகாஸ்ரீ மிதந்துகொண்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியில் ஆழ்ந்தார். உடனடியாக மகளை மீட்டு ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
வீட்டில் தாயுடன் தூங்கியபோது எழுந்த சிறுமி, விளையாடுவதற்காக வீட்டின் வெளியே வந்தபோது, தேங்கி இருந்த மழைநீரில் தவறி விழுந்து மூழ்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்த மாங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, குழந்தையின் உடலை மீட்டு போரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
மேலும் குழந்தை மரணத்துக்குப் பின்னால் வேறு காரணம் ஏதேனும் உள்ளதா எனும் கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
