வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பாக நீலகிரி, கோயம்பத்தூர் மலைப்பகுதி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகி, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. 65 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடியதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.