சுங்கக் கட்டணம் மற்றும் ரெயில் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை எனக் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டினார்.
விருதுநகரில் நிருபர்களுடன் பேசிய அவர் கூறியதாவது: “சுங்கக் கட்டணங்கள் இடைவிடாது உயர்த்தப்பட்டு வருகின்றன. அதேபோல் உயர்த்தப்பட்ட ரெயில் கட்டணமும் இதுவரை குறைக்கப்படவில்லை. இதுபற்றி பா.ஜனதா அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை. மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு சாதாரண மக்களின் பிரச்சினைகள் குறித்த அக்கறையே இல்லை,” என்றார்.
அடுத்து, விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,
“அது குறித்து முடிவு செய்வது அகில இந்திய காங்கிரஸ் தலைமைத்தான். இருப்பினும், இது காமராஜர் பிறந்த மண் என்பதால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இதை உயர்மட்டத் தலைமைக்கு எடுத்துரைக்கும். அதிக இடங்களைப் பெற வேண்டும் என்ற விருப்பம் பலரிடமும் உள்ளது. வாய்ப்பு கிடைக்குமா என்பதற்கு காலமே பதில் சொல்லும்,” என்றார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது: இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். விட்டுக்கொடுப்பது என்பது காங்கிரஸின் பொறுப்பாக மட்டும் இருக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் வாக்குகளைப் பெற்று அதிகாரம் பிடிக்கலாம் என யாரும் நினைக்கக்கூடாது.
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழ்நாட்டில் பிரசாரத்திற்காக வருவார்கள். வெற்றி பெற அனைவரும் பாடுபடுவோம். காங்கிரஸை மதிக்கவில்லை என்றால் முதல்-அமைச்சராக வர முடியாது; நிலைமை வேறு மாதிரி மாறிவிடும்,” என்றார்.
