தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்துக்கணிப்புகள் அரசியல் களத்தை அனல் பறக்க விட்டுள்ளன.
இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முதலிடத்தில் இருப்பதாகச் சில தகவல்கள் வலம் வரும் நிலையில், அதற்கு திமுக தரப்பிலிருந்து கடுமையான எதிர்வினை வந்துள்ளது.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “தவெக ஒரு இடைத்தேர்தலில் கூட இதுவரை போட்டியிடவில்லை. அவர்களின் பலம் என்னவென்றே தெரியாத நிலையில், அவர்கள் முதலிடத்தில் இருப்பதாகக் கூறுவது ஒரு முறையான கருத்துக்கணிப்பு கிடையாது.
இது திட்டமிட்டு மக்கள் மத்தியில் செய்யப்படும் ‘கருத்துத் திணிப்பு'” என்று சாடியுள்ளார். மேலும், திமுக அரசின் திட்டங்களான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், வரும் தேர்தலில் திமுக-வின் வெற்றி உறுதியானது என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் அரசியல் வருகை திமுக-வுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற ரீதியில் அமைச்சர் பேசியுள்ளது, தவெக மற்றும் திமுக தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
