தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) தங்களது என்டிஏ கூட்டணிக்குள் இழுக்க பாஜக மேலிடம் மிகத் தீவிரமான முயற்சிகளை எடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

ஆனால், இந்தத் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அதிரடியான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

பாஜக தரப்பு தவெக மீது அதீத ஆர்வம் காட்டினாலும், விஜய்யின் தொண்டர்களுக்கும் சரி, கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளுக்கும் சரி, அந்தக் கூட்டணியில் இணைவதற்குத் துளியும் விருப்பமில்லை என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

ஒருபுறம் தேர்தல் தேதி அறிவிப்பு குறித்த எதிர்பார்ப்பு, மறுபுறம் கூட்டணிக் குழப்பங்கள் எனத் தமிழக அரசியல் களம் தற்போது உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், விஜய்யின் இந்தத் தன்னிச்சையான முடிவு மற்ற அரசியல் கட்சிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.