மத்திய அமெரிக்க நாடுகளான ஹோண்டுராஸ் மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகளில் உள்ள சிறைச்சாலைகள், கைதிகளை அடைத்து வைக்கும் இடமாக இல்லாமல் கொடூரமான குற்றவாளிகளின் தலைமையகமாகவே செயல்படுகின்றன.
இங்குள்ள சிறைகளில் எம்.எஸ்-13 மற்றும் பேரியோ 18 போன்ற பயங்கரமான கும்பல்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. சிறை அதிகாரிகள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கும் நிலையில், உள்ளே இருக்கும் கும்பல் தலைவர்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்தி வெளியே நடக்கும் கொலைகள் மற்றும் கடத்தல்களுக்கு உத்தரவிடுகின்றனர்.
ஒருமுறை ஹோண்டுராஸ் பெண்கள் சிறையில் நடந்த மோதலில் 41 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டும், தீயிட்டும் கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியது. பல நேரங்களில் இங்கு நடக்கும் மோதல்களில் கைதிகளின் தலைகளைத் துண்டித்து அதைக் கால்பந்தாக வைத்து விளையாடும் அளவுக்குக் கொடூரம் அரங்கேறுவதாகக் கூறப்படுகிறது.
சிறைகளுக்குள் நடத்தப்பட்ட சோதனைகளில் ஏகே-47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எல் சால்வடாரில் உள்ள ‘எஸ்பெரான்சா’ சிறையில் 10,000 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 30,000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சிறைகளில் காவலர்களே கைதிகளால் கொல்லப்படும் அவலமும் நீடிக்கிறது. இதனால் தற்போது அந்த நாட்டு அரசாங்கங்கள் ராணுவத்தைக் கொண்டு சிறைகளைக் கட்டுப்படுத்தவும், மொபைல் சிக்னல்களைத் துண்டிக்கவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இருப்பினும், குற்றக்கும்பல்களின் இரும்புப்பிடியில் இருக்கும் இந்தச் சிறைச்சாலைகள் இன்றும் உலகின் மிகவும் ஆபத்தான இடங்களாகவே கருதப்படுகின்றன.
