தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாருடன் கூட்டணி வைக்கும் என்பது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

குறிப்பாக, விஜய் டெல்லி சென்றுள்ள நிலையில், தவெக தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இணைய வாய்ப்புள்ளதாகப் பேசப்பட்டது. இது குறித்து விளக்கமளித்த கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கூட்டணி தொடர்பாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் வெறும் யூகங்களே என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை தொண்டர்கள் எதையும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

2026 தேர்தலில் தவெக – திமுக இடையே தான் நேரடிப் போட்டி நிலவுவதாகவும், கூட்டணி குறித்த இறுதி முடிவைத் தகுந்த நேரத்தில் தலைவர் விஜய் முறைப்படி அறிவிப்பார் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், விஜய்யின் டெல்லி பயணம் சிபிஐ விசாரணை தொடர்பானது மட்டுமே தவிர, இதில் அரசியல் பேரம் ஏதுமில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.