தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, சசிகலா திடீரெனச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.
இரவு 9 மணிக்குத் தொடங்கி சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த ரகசியச் சந்திப்பில், திமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இல்லாத ஒரு ‘மூன்றாம் அணி’யை அமைப்பது குறித்துச் சசிகலா தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தென் மாவட்ட வாக்கு வங்கியைத் தன்பக்கம் வைத்துள்ள சசிகலாவும், வட மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க ராமதாஸும் இணைந்தால் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதே சசிகலாவின் திட்டமாகச் சொல்லப்படுகிறது.
இருப்பினும், இந்தச் சந்திப்பு குறித்து விளக்கமளித்த பாமக தரப்பு, “இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே, அரசியல் பேசப்படவில்லை” என மழுப்பலாகப் பதிலளித்துள்ளது.
அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில், ராமதாஸ் சசிகலாவின் அழைப்பை ஏற்றுப் புதிய அணியில் இணைவாரா அல்லது கழற்றி விடுவாரா என்பது கோட்டை வரை விவாதமாக மாறியுள்ளது.
