ஹைதராபாத்தில் குடிபோதையில் ஆட்டோ ஓட்டி வந்த நபரை போக்குவரத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் அவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, போலீசார் அவரது ஆட்டோவைப் பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், “எனது வாகனத்தை இப்போதே என்னிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று ரகளையில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாகத் தான் மறைத்து வைத்திருந்த பாம்பைக் காட்டி, அங்கிருந்த போலீசாரை நோக்கி மிரட்டல் விடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

​சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே பாம்பை வைத்துக்கொண்டு அவர் செய்த இந்தச் செயல், அங்கிருந்த பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. காவல்துறையினரை ஒருமையில் பேசியும், பாம்பைக் கொண்டு மிரட்டியும் அவர் செய்த ரகளை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இறுதியில், துணிச்சலாகச் செயல்பட்ட காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். போதை தலைக்கேறினால் மனிதன் என்ன செய்கிறான் என்றே தெரியாமல் நடந்துகொள்வதற்கு இந்தச் சம்பவமே ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.