தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இடையே தற்போது வார்த்தை போர் வெடித்துள்ளது. முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், “விஜய் நடிகையை விட்டு வெளியே வர வேண்டும்” என்று தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு அரசியல் கட்சித் தலைவராக இருந்து கொண்டு, ஒரு நடிகையைக் குறிப்பிட்டு இப்படிப் பேசியது நாகரிகமற்ற செயல் எனப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

​இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நயினார் நாகேந்திரன் மிகவும் கீழ்த்தரமான கருத்தையே முன்வைத்துள்ளார். இப்படிப் பேசுவதன் மூலம் அவர் தனது சொந்தத் தரத்தைத் தான் குறைத்துக் கொள்கிறார். இதையெல்லாம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார். விஜய்யை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், தனிநபர் தாக்குதலில் பாஜக ஈடுபடுவதாக தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.