தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை விமர்சிக்கும் போது நடிகை ஒருவரைக் குறிப்பிட்டுப் பேசியது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஏற்கனவே தவெக நிர்வாகிகள் இதற்குப் பதிலடி கொடுத்து வரும் நிலையில், தற்போது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் இது தொடர்பாகக் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகப் பெண்களிடம் நயினார் நாகேந்திரன் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்; அதுதான் உண்மையான அரசியல் நாகரீகம்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், பெண்களுக்கென்று உரிய மரியாதையையும், சமூக அந்தஸ்தையும் வழங்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை மட்டுமல்ல, அரசியல் தலைவர்களின் பொறுப்பும் கூட என்று டாக்டர் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு அரசியல் தலைவரை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு பெண்களை இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சுக்குக் கூட்டணிக் கட்சித் தலைவரே கண்டனம் தெரிவித்துள்ளது பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
