சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘ஜனநாயகன்’ திரைப்பட எடிட்டிங் விவகாரத்தில் தற்போது ஒரு அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. ‘ஜனநாயகன்’ படத்தின் படத்தொகுப்பாளரான பிரதீப் ராகவ், சங்கத்தின் விதிகளை மீறி, மெம்பர்ஷிப் இல்லாத வெளியாட்களை வைத்து எடிட்டிங் பணிகளைச் செய்ததாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், ரிலீஸுக்கு முன்பே ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முக்கியக் காட்சிகள் வெளியே கசிந்து, படக்குழுவினருக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்தது. “நம் சொந்த சங்க ஆளுங்களை மதிக்காமல் வெளியாட்களை நம்பியதால் தான் இந்த துரோகம் நடந்தது” என்ற கோபத்தில், எடிட்டர் பிரதீப் ராகவ் மீது படத்தொகுப்பாளர் சங்கம் அதிரடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தது.

​இந்த நிலையில், இந்த விவகாரம் ஒரு சுமுகமான முடிவுக்கு வந்துள்ளது. எடிட்டர் பிரதீப் ராகவ் அவர்கள், “இனிமேல் சங்கத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே நேர்மையாகச் செயல்படுவேன்” என்று தனது தவறை ஒப்புக்கொண்டு சங்கத்திடம் மனம் உருகி மன்னிப்புக் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட படத்தொகுப்பாளர் சங்கத் தலைவர் கோபி அவர்கள், பிரதீப் ராகவ் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை முழுமையாக வாபஸ் பெறுவதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.