திருவள்ளூர் தேர்தல் பிரசாரத்தின் போது, இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாகப் பேசினார். குறிப்பாக, நடிகர் விஜய்க்கு இளைஞர்களிடையே இருக்கும் ஆதரவைக் குறிவைத்து அவர் சில முக்கிய கருத்துக்களை முன்வைத்தார்.

​”கொரோனா காலத்தில் மாணவர்கள் ஒரு வருடம் வீணாகிவிடுமோ என்று தவித்தபோது, ‘ஆல் பாஸ்’ போட்டு உங்களைக் காப்பாற்றியது இந்த எடப்பாடி பழனிசாமி தான்” என்று நினைவூட்டிய அவர், ஆன்லைன் வகுப்புகள் முதல் இலவச மடிக்கணினி, சைக்கிள் வரை அதிமுக அரசு செய்த உதவிகளைப் பட்டியலிட்டார்.

“செடி நட்டு, மரம் வளர்த்தவன் தான் அதன் பலனை அனுபவிக்க வேண்டும்; இவ்வளவு சலுகைகளைப் பெற்றுவிட்டு இப்போது வேறெங்கோ ஓட்டுப் போடுவது சரியாக இருக்குமா?” என்று கேள்வி எழுப்பிய இபிஎஸ், இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை நினைத்துச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.