தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மீதான பற்றின் காரணமாக, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையிலும் நடிகர் பொன்னம்பலம் கம்பம் தொகுதியில் அக்கட்சி வேட்பாளருக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மிஸ்ரா-வை ஆதரித்து, நடிகர் பொன்னம்பலம் வீதி வீதியாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டார். திறந்த வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடையே பேசிய அவர், வரும் தேர்தலில் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களித்து மிஸ்ராவை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“மிஸ்ராவை மிஸ் பண்ணீடாதீங்க.. மிஸ்ராவை மிஸ் பண்ணா வாழ்க்கையவே மிஸ் பண்ண மாதிரி” – கம்பம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மிஸ்ராவை ஆதரித்து நடிகர் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்பு#Cumbum | #Ponnambalam | #TVK | #Vijay | #ElectionWithPT pic.twitter.com/3VTBM3jdHh
— PttvOnlinenews (@PttvNewsX) April 11, 2026
தனது பேச்சின் போது ஆளுங்கட்சியான திமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளை அவர் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில், “திமுக என்பது ஒரு தீயசக்தி. அதேபோல், தேமுதிக என்பது தீஞ்ச சக்தி (கருகிப்போன சக்தி). இந்த இரண்டு சக்திகளிடம் இருந்தும் தமிழகத்தைக் காக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது,” என்று சாடினார். வேட்பாளர் மிஸ்ராவின் பெயரை முன்வைத்து சுவாரஸ்யமாகப் பேசிய பொன்னம்பலம், வாக்காளர்களைக் கவரும் வகையில் பின்வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மிஸ்ராவை மக்கள் எக்காரணம் கொண்டும் மிஸ் பண்ணிடாதீங்க. இவரை நீங்கள் தவறவிட்டால், உங்கள் வாழ்க்கையே மிஸ் ஆகிவிடும். அந்த அளவுக்கு மக்களுக்காக உழைக்கக்கூடியவர் எனத் தெரிவித்தார்.
மேலும் தீவிரமான உடல்நலப் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ள பொன்னம்பலம், சோர்வின்றி தவெக-விற்காகப் பிரசாரம் செய்தது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரசாரத்தின் போது தவெக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
