திருவள்ளூர் பிரசாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை மறைமுகமாகத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி, “ஒரு மக்கள் தலைவன் என்பவன் எத்தகைய சவால்கள் வந்தாலும் களத்தில் நின்று மக்களைக் காக்க வேண்டும். ஆனால், ஒரு முக்கியமான பிரச்சனை வந்தபோது, இந்தத் தலைவர் சுமார் 72 நாட்கள் ஆளையே காணாமல் போய்விட்டார்” என்று கடுமையாக விமர்சித்தார்.

​திரையில் ஒருவர் 50 பேரை அடிப்பது போன்ற காட்சிகளை நிஜம் என்று நம்பி இளைஞர்கள் ஏமாந்துவிடக் கூடாது என்றும், திரை உலகமும் நிஜ அரசியலும் வேறு என்பதை உணர வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார். தான் 51 ஆண்டுகளாக அதிமுகவில் உழைத்து வருவதையும், போராட்டங்களுக்காக 7 முறை சிறை சென்றிருப்பதையும் சுட்டிக்காட்டிய அவர், “அரசியலுக்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் வந்த பிறகு நம்பியவர்களைக் கைவிடக் கூடாது.

திரைப்படக் கனவுகளை நம்பி ஓட்டுப் போட்டால் அது வீணாகிவிடும்” என இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார். விஜயின் அரசியல் வருகைக்குப் பிறகு இபிஎஸ் விடுத்துள்ள இந்த மிகக்கடுமையான விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.