சேலத்தில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நாளை (டிசம்பர் 29) நடைபெற உள்ள பாமக செயற்குழுக் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக, மருத்துவர் ராமதாஸ் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

பாமகவை அபகரிக்கும் அன்புமணி சூழ்ச்சியால், மருத்துவர் ராமதாஸ் நிலைகுலைந்துள்ளார் என்ற கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. கட்சியை அன்புமணி சீரழித்துவிட்டதாக பலர் என்னிடம் கூறுகின்றனர். என்னை பாமகவிலிருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அன்புமணியை நீக்கியது மருத்துவர் ராமதாஸ்தான். எந்த பொறுப்பிலும் இல்லாத ஒருவர், என்னை கட்சியிலிருந்து நீக்க முடியாது.

அன்புமணியின் பின்னால் விவரம் அறியாமல் சென்ற நிர்வாகிகள், விரைவில் மீண்டும் திரும்பி வருவார்கள். மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பாமக அமைக்கும் கூட்டணி, வரவுள்ள தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். பாமகவில் அன்புமணி தொடர வேண்டும் என அனைவரும் விரும்பினோம். ஆனால், சூழ்ச்சிகளால் அவர் பிரிந்து சென்றார்.
அன்புமணியின் தூண்டுதலால், சிலர் மருத்துவர் ராமதாஸின் மனம் புண்படும் வகையில் பேசினர்.

இதன் விளைவாக, ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் வலிமையான அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருந்த பாமக, தற்போது அங்கீகாரம் இல்லாத கட்சியாக மாறியுள்ளது. இந்த நிலையில், மீண்டும் கட்சியை அங்கீகாரம் பெற்ற வலுவான அரசியல் சக்தியாக உருவாக்குவேன் என மருத்துவர் ராமதாஸ் உறுதி தெரிவித்து, புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். இதன் அடிப்படையில்தான், ராமதாஸ் தலைமையில் பாமக மீண்டும் வலிமையான கட்சியாக உருவெடுத்து வருகிறது என ஜி.கே.மணி தெரிவித்தார்.