தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கன்னியாகுமரி மாவட்டம் மகதானபுரம் பகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் செயல்படுத்தப்படவுள்ள தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து அவர் விரிவான வாக்குறுதிகளை அளித்தார்.

தமிழகத்தை தொழில்நுட்ப ரீதியாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், “தமிழ்நாடு ஏஐ (AI) டிஜிட்டல் தலைநகராக மாற்றப்படும்” என விஜய் அறிவித்தார். இதன் மூலம் நவீன தொழில்நுட்ப வசதிகள் சாமானிய மக்களையும் சென்றடையும் என அவர் உறுதி அளித்தார்.

நிர்வாகத் தாமதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற 6 மாத காலத்திற்குள் ‘தமிழ்நாடு சேவை உரிமைத் திட்டம்’ உருவாக்கப்படும். இதன் கீழ், மக்களின் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சட்டசபையில் நேரடி விவாதங்கள் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். லஞ்சம் இல்லாத நிர்வாகமே எங்களது இலக்கு எனக் குறிப்பிட்ட அவர், அரசின் நலத்திட்டங்கள் இடைத்தரகர்கள் இன்றி ஒவ்வொரு குடிமகனுக்கும் நேரடியாகச் சென்றடையும் என்றார்.

குறிப்பாக பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்க, அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக மக்களின் வீட்டு வாசலுக்கே வந்து சேரும். குடும்ப அட்டை (Ration Card) உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆவணங்களும் இனி மக்களின் மொபைல் போன்களிலேயே இருக்கும் வகையில் டிஜிட்டல் மயமாக்கப்படும். தவெக அரசின் திட்டங்களைப் பெறுவதற்கு எனப் பிரத்யேக அடையாள அட்டை பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றார். மேலும் மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான இந்த அறிவிப்புகள், அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.