மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கல்யாண் ரயில் நிலையத்தில், ரயில்கள் தாமதமாக வருவதால் பிளாட்பாரத்தில் காத்திருக்கும் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அபராதம் விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த வாலிபர் தனது உறவினரை ரயிலில் ஏற்றி விடுவதற்காகக் கல்யாண் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது ரயில் வர 2 மணி நேரம் தாமதமாகும் எனத் தெரிந்ததால், அவர் 10 ரூபாய் கொடுத்து பிளாட்பாரம் டிக்கெட் வாங்கியுள்ளார்.
📍Kalyan Railway Station
> Man comes to drop his relatives
> Buys a platform ticket
> Train arives 5 hours late
> Platform ticket expires in 2 hours
> He gets fined ₹500How is this fair?? pic.twitter.com/a0vbN3NbjH
— PunsterX (@PunsterX) June 11, 2026
ஆனால், அந்த ரயில் அறிவிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி 5 மணி நேரம் தாமதமாக வந்துள்ளது. இதனால் வேறு வழியின்றி உறவினரை ரயிலில் ஏற்றிவிட்டு அவர் திரும்பியபோது, அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர் அவரை வழிமறித்துள்ளார். இந்திய ரயில்வே விதிகளின்படி ஒரு பிளாட்பாரம் டிக்கெட் 2 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் என்பதால், 2 மணி நேரத்திற்கும் மேலாக பிளாட்பாரத்தில் தங்கியிருந்ததாகக் கூறி அந்த வாலிபருக்கு டிடிஆர் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர், டிடிஆருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். “ரயில் 5 மணி நேரம் தாமதமாக வந்ததே ரயில்வே நிர்வாகத்தின் தவறுதான்; அதனால்தான் எனது டிக்கெட்டின் கால அவகாசம் முடிவடைந்தது. இதில் எனது தவறு என்ன இருக்கிறது? ரயில் தாமதத்திற்கு ரயில்வே நிர்வாகம் அபராதம் கட்டுமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார். இது தொடர்பான வீடியோ எக்ஸ் (X) தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் மத்தியிலும் காரசாரமான விவாதம் வெடித்துள்ளது.
சில பயனர்கள் பிளாட்பார கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த இந்த விதிமுறை அவசியம் என்று கூறினாலும், பெரும்பாலான நெட்டிசன்கள், “ரயில் தாமதமாகும் பட்சத்தில் பிளாட்பாரம் டிக்கெட்டின் கால அவகாசத்தையும் தானாகவே நீட்டிக்க வேண்டும் அல்லது ரயில் லேட்டாக வரும்போது பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் நஷ்டஈடு வழங்க வேண்டும்” என்று வாலிபரின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
