மத்திய பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் உள்ள பந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்களையே அதிரவைத்த விசித்திரமான மருத்துவச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தமோஹ் மாவட்டத்தைச் சேர்ந்த 56 வயதான ராமதாஸ் என்ற நபர், இரவு தூங்குவதற்கு முன்பாக தனது முன்ன வரிசையில் இருந்த செயற்கை பற்களைக் கழற்றி வைக்க மறந்துவிட்டு அப்படியே தூங்கியுள்ளார். நள்ளிரவில் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உடலில் ஆக்சிஜன் அளவும் வேகமாகக் குறையத் தொடங்கியுள்ளது.

இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர், அவரை உடனடியாக பந்தேல்கண்ட் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ​அங்கு அவருக்கு உடனடியாக எக்ஸ்-ரே (X-Ray) எடுத்துப் பார்க்கப்பட்டது. ஆனால், எக்ஸ்-ரே ரிப்போர்ட்டில் தொண்டைக்குள் எந்தவொரு பொருளும் சிக்கியிருப்பது போன்ற அறிகுறியே தெரியவில்லை. ராமதாஸ் பயன்படுத்திய செயற்கை பல் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது என்பதால், அது எக்ஸ்-ரே சோதனையில் சிக்காமல் மருத்துவர்களுக்கே சவால் விட்டுள்ளது.

இருப்பினும், மருத்துவர்கள் எண்டோஸ்கோபி மற்றும் ‘எசோபகோஸ்கோபி’ (Esophagoscopy) என்ற அதிநவீன தொழில்நுட்பம் மூலம் சோதித்தபோது, அவரது உணவு மற்றும் மூச்சுக்குழாய் சந்திப்பில் மூன்று செயற்கை பற்கள் கிளிப்புடன் மாட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இறுதியில் மருத்துவர்கள் சாமர்த்தியமாகச் செயல்பட்டு, அனஸ்தீசியா கொடுத்து ஆபரேஷன் மூலம் பற்களைப் பத்திரமாக வெளியே எடுத்து ராமதாஸின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.