உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், குடும்பச் சண்டையின் உச்சகட்டமாகத் தனது சொந்தப் பேத்தியையே தாத்தா ஒருவர் படிக்கட்டுகளிலிருந்து கீழே தள்ளிவிட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. அதாவது அந்த நபருக்கும், அவரது மகன் மற்றும் மருமகளுக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாடியில் இருந்து படிக்கட்டுகள் வழியாகக் கீழே இறங்கி வந்த அந்த சிறுமியை, ஆத்திரமடைந்த தாத்தா பலவந்தமாகப் பிடித்து இழுத்து, படிக்கட்டின் உச்சிக்குக் கொண்டு சென்று கொடூரமாகக் கீழே தள்ளிவிட்டுள்ளார்.

அந்தச் சிறுமி படிக்கட்டுகளில் இருந்து உருண்டு விழுந்து வலியால் அலறிய போதிலும், அந்த முதியவர் எந்தவொரு சலனமும் இல்லாமல், எதுவுமே நடக்காதது போல் அங்கிருந்த கட்டிலில் சென்று படுத்துக் கொண்டார். இந்தத் தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாட்டி, உடனடியாகக் கட்டிலில் இருந்து எழுந்து ஓடிவந்து, படிக்கட்டின் கீழே வலியால் துடித்துக் கொண்டிருந்த பேத்தியைத் தூக்கி அரவணைத்தார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்களைக் கொண்டு ஹரித்வார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மற்றும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். பேரக் குழந்தைகளைக் கொஞ்சி விளையாட வேண்டிய வயதில், குடும்பச் சண்டைக்காக ஒரு குழந்தையிடம் இப்படி மிருகத்தனமாகக் காட்டிய கொடூரம் இணையவாசிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.