தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கன்னியாகுமரியில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட ரோடு ஷோவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார்.
அப்போது கூட்டத்தில் பேசிய அவர், தற்போதைய நிதி மேலாண்மை மற்றும் பட்ஜெட் தாக்கல் செய்யும் முறைகளை கடுமையாகச் சாடினார்.
“இன்றைக்கு பட்ஜெட் மற்றும் நிதி மேலாண்மை என்பது சாதாரண மக்களுக்குப் புரியாத ஒரு ரகசியமாகவே இருக்கிறது; அது நிதி சிதம்பரம் ரகசியம் போல மூடி மறைக்கப்படுகிறது,” என்று தனது பாணியில் கிண்டலாகவும் நேரடியாகவும் விமர்சித்தார்.
மேலும், தனது ஆட்சியில் நிர்வாகம் எப்படி இருக்கும் என்பது குறித்துப் பேசிய விஜய், “தவெக ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ‘தமிழ்நாடு சிட்டிசன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் தரவுகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டு, ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் அரசின் நலத்திட்டங்கள் உங்கள் வீட்டு வாசலுக்கே தேடி வரும்.
இனி எதற்கும் நீங்கள் அலையத் தேவையில்லை,” என டிஜிட்டல் புரட்சி குறித்த அதிரடி வாக்குறுதியை அளித்தார். முன்னதாக காரைக்குடியில் பேச முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்த அவர், கன்னியாகுமரி மக்களின் வரவேற்பைப் பார்த்து நெகிழ்ந்து போனார். விஜய்யின் இந்த ‘சிதம்பரம் ரகசியம்’ கமெண்ட் இப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
