தமிழகத்தில் தனியார் கல்லூரிகளில் செட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் பணியாற்றினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார். கடலூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியனிடம், தமிழகத்தில் கல்லூரிகளில் செட் மற்றும் நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களை குறைந்த ஊதியம் கொடுத்து பணி நியமனம் செய்துள்ளதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், தனியார் கல்லூரிகளில் ஏற்கனவே செட் மற்றும் நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்ற நெறிமுறை செயல்பாட்டில் உள்ளது. அதேசமயம் இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளும் இதனை கண்காணித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பல கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டு தேர்ச்சி பெறாதவர்கள் பணியாற்றி வந்தால் அது உண்மை என்று தெரிந்தால் தக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தமிழகத்தில் உயர்கல்வியை உச்ச நிலைக்கு கொண்டு செல்வதற்கு பெரும் முயற்சியை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகின்றார். மார்ச் மாதம் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உதவி பேராசிரியர் பணிக்கான மாநில தகுதி தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு  அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தமிழக உயர்கல்வியில் மிகுந்த அக்கறையுடன் தான் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.